Home jaffna news அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல-மக்களின் சேவகர்கள்-மிரட்டும் வடக்கு ஆளுநர்..!{படங்கள்}

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல-மக்களின் சேவகர்கள்-மிரட்டும் வடக்கு ஆளுநர்..!{படங்கள்}

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களினால் பிரதம விருந்தினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களுக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் கூறினார். உள்ளூரில் காணப்படும் வளங்களை கொண்டு தங்களுக்கான வருமானங்களை உள்ளூராட்சி நிறுவனங்கள் திரட்டிக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். தற்போது உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் தேவைகளுக்கு போதுமான நிதியை அந்தந்த சபைகளே திரட்டுதல் வேண்டும். இதேவேளை மக்களுடன் சிநேகமான முறையில் தங்களின் சேவைகளை வழங்க வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் மாதாந்தம் சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல எனவும், மக்களுக்கான சேவகர்கள் எனவும் கௌரவ ஆளுநர் வலியுறுத்தி கூறினார்.

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல-மக்களின் சேவகர்கள்-மிரட்டும் வடக்கு ஆளுநர்..!{படங்கள்}-oneindia news

Exit mobile version