Home Uncategorized ஆப்கானைச் சுருட்டிய இலங்கை வலுவான நிலையில்!

ஆப்கானைச் சுருட்டிய இலங்கை வலுவான நிலையில்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒற்றை டெஸ்ட்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்குள் ஆப்கானைச் சுருட்டிய இலங்கையணி, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளிக்கமுடியாமல், சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அசித்த வீசிய முதலாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இப்ராஹிம் ஸத்ரான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
எனினும் ரஹ்மத் ஷா இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டுசெல்லப் போராடினார்.
2ஆவது விக்கெட்டுக்காக அறிமுக வீரர் நூர் அலி ஸத்ரானுடன் 57 ஓட்டங்களைப் பகிர்ந்த ரஹ்மத் ஷா, பின்னர் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டங்களைப் பெற்று விஷ்வா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 109 ஓட்டங்களாக இருந்தபோது ஹஷ்மத்துல்லா ஷா 17 ஓட்டங்களுடன் விஷ்வா பெர்னாண்டோவினால் களம்விட்டு வெளியேற்றப்பட்டார்.அடுத்து களம் புகுந்த நசிர் ஜமால் ஓட்டம் பெறாத நிலையில் ப்ரபாத் ஜயசூரியவினால் போல்ட் செய்யப்பட்டார்.
மறுபக்கத்தில் தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷா 5ஆவது விக்கெட்டுக்காக இக்ரம் அலி கில்லுடன் மேலும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
139 பந்துகளை எதிர்கொண்ட ரஹ்மத் ஷா 13 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது விஷ்வா பெர்னாண்டோவினால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டார்.
ஆப்கானிஸ்தானுக்காக இதுவரை சகல டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ரஹ்மத் ஷா ஆட்டம் இழந்த பின்னர் கடைசி 4 விக்கெட்கள் 29 ஓட்டங்களுக்கு சரிந்தன.

மத்திய வரிசையில் அலி கில், காய்ஸ் அஹ்மத் ஆகிய இருவரும் தலா 21 ஓட்டங்களைப் பெற்றனர். அவர்கள் இருவரதும் விக்கெட்களை முறையே விஷ்வா பெர்னாண்டோவும் ப்ரபாத் ஜயசூரியவும் வீழ்த்தினர்.
4 ஓட்டங்களைப் பெற்ற ஸியா உர் ரெஹ்மானின் விக்கெட்டை விஸ்வா பெர்னாண்டோவும் 12 ஓட்டங்களைப் பெற்ற நிஜாத் மசூத், ஓட்டம் பெறாத மொஹமத் சலீம் ஆகியோரின் விக்கெட்களை அசித்த பெர்னாண்டோவும் கைப்பற்றினர்.
பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேரமுடிவில், விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை எடுத்துள்ளது..

முன்னாள் அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 7 பவுண்டரிகள் உட்பட 42 ஓட்டங்களுடனும் நிஷான் மதுஷ்க 6 பவுண்டரிகள் உட்பட 36 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Exit mobile version