Home Uncategorized கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும் – அதிர்ச்சி ரிப்போர்ட் உள்ளே

கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும் – அதிர்ச்சி ரிப்போர்ட் உள்ளே

கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும் – அதிர்ச்சி ரிப்போர்ட் – மு.தமிழ்ச்செல்வன்

கடந்த சில மாதங்களாக இலங்கைத் தீவு முழுவதும் வைத்தியசாலைகளில் நடைபெற்ற திடீர் மரணங்களாலும் அதனை ஒட்டி எழுந்த விவாதங்களாலும் நிறைந்திருந்தன.

இலவச வைத்தியத்துறையின் பெருமைகளையும் அடைவுகளையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த விவாதங்கள் அமைந்திருந்தன.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளித்து அவர்களது நம்பிக்கையை தக்க வைப்பதில் எவருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக ‘உள்வீட்டுச் சண்டைகள்’ வெளியகமாக இடம்பெறுவதால் மக்கள் இன்னமும் குழம்பிப்போயுள்ளனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் நிகழ்ந்த மருத்துவ தவறுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து ஒரு இளம் தாயாரும் அவரது கணவரும் நீதிக்கான போராட்டம் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். ‘அம்பலம் ஏறாத ஏழையின் சொல்’லாக அவர்களது குரல் சரியான வகையில் எத்தரப்பினராலும் வெளியே கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.

அண்மையில் குறித்த கணவர் என்னைத் தேடி வந்து சந்தித்து தம்வசம் இருக்கும் ஆவணங்களைக் காட்டி தமது நீதிக்கான போராட்டத்தில் துணைபுரியுமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து மேற்கொண்ட தேடலில் அந்த இளம் குடும்பத்தவர்களது குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது போலவே தெரியவருகிறது.

இதற்கான உறுதியான ஆதாரமாக கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடந்த மாதம் NP/04/45/DGH/KOC/Report என்ற இலக்கமிட்டுச் சமர்ப்பித்த அறிக்கையே காணப்படுகிறது.

இந்த அறிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களது கருத்துக்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு துறைசார் சிரேஸ்ட வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள், உட்பட மருத்துவப் பணியாளர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு அவர்களது கருத்துக்களையும் பெற்றுக்கொண்டேன். இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையால் தங்களது பெயர்களை வெளிப்படுத்த வேண்டாம் கூறியவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துமாறும், எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

பணிப்பாளரது அறிக்கை கூறுவது என்ன?

குறித்த அறிக்கையின்படி, 26.06.2023 அன்று கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் ஆறாம் இலக்க பிரசவ மகளிர் விடுதியில் காலை 09.23க்கு குறித்த தாயார் தனது பிரசவத்திற்காக வைத்தியர்களால் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மறுநாள் பிரசவத்தினைச் செயற்கையாகத் துண்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 27.06.2023 அன்று ஆறு மணிநேர இடைவெளியில் தாயாருக்கு 1 மில்லிகிராம் களிம்பு (Prostaglandin gell)) பிறப்புவாசலினால் உட்செலுத்தப்பட்டது.

அதேதினம் மாலை 1.20க்கு பன்னீர்குடம் உடைந்து நீர் வெளியேறியது. அப்போது கர்ப்பப்பையின் கழுத்து 5 சென்ரிமீற்றராக விரிவடைந்திருந்தது. அதனையடுத்துத் தாயார் பிரசவ அறைக்கு (Labour room) கொண்டு செல்லப்பட்டார்.

அன்று மாலை 5.30 மணிக்கு கர்ப்பப்பையின் கழுத்து முழுமையாக (10 CM) விரிவடைந்திருந்தது. மாலை 6.30 மணிக்கு தாயாரைப் பார்வையிட்ட உள்ளகப் பயிற்சி மருத்துவர் (Intern House Officer), அப்போது கடமையில் இருந்த மூத்த வைத்திய உத்தியோகத்தருடன் (SHO) தொடர்பு கொண்டுள்ளார். அதனையடுத்து 7.10 மணிக்கு வருகைதந்த மூத்த வைத்திய உத்தியோகத்தர் தாயாரைப் பார்வையிட்டபின் மகப்பேற்றியல் நிபுணருடன் (VOG) தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார்.

அதன்பின்னர் வருகைதந்து பார்வையிட்ட மகப்பேற்றியல் நிபுணர் பிரசவத்தின் இரண்டாம் கட்டமானது நீண்டு செல்வதால் (Lengthen second stage) குழந்தையை ஆயுதம் மூலம் (Instrumental supply) பிரசவிப்பதென முடிவுசெய்தார். பிரசவ அறையில் ஆயுதம் மூலம் குழந்தையினைப் பிரசவிக்க எடுத்த முயற்சியானது தோல்வியில் முடிந்ததை அடுத்து, அவசரமாகச் சிசேரியன் சத்திரசிகிச்சை (EM/LSCS) செய்யப்பட்டது. இந்தப் பிரசவம் தொடங்கியதில் இருந்து நிறைவடையும் வரை குழந்தையினது இதயத்துடிப்பு (CTG) மற்றும் தாயாரின் (இதயத்துடிப்பு சுவாச வீதம் முதலிய) கணியங்கள் சாதாரணமாகவே இருந்தன.

கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும் - அதிர்ச்சி ரிப்போர்ட் உள்ளே - Dinamani news - கிளிநொச்சி வைத்தியசாலை,  கிளிநொச்சி வைத்தியசாலையின்,  கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலை,  கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில்,  மருத்துவ தவறுகளால்,  கிளிநொச்சி,  தாயாரைப்,  மகப்பேற்றியல் நிபுணர்

முண்ணான் உணர்விழப்பு (Spinal Anaesthesia) முறையின் உதவியுடன் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சையானது மூத்த வைத்தியரினால் (SHO) மேற்கொள்ளப்பட்டது. வயிற்றறையினைச் சத்திரசிகிச்சையின்போது திறந்த அந்த மூத்த வைத்தியர் வயிற்றறைக்குழியினுள் (abdomen cavity) நிரம்பியிருந்த இரத்தத்தினைக் கண்டதும் கர்ப்பப்பை வெடித்திருக்கக்கூடும் எனச் சந்தேகித்தார். அதனை அவர் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவித்தார்.

அடுத்து அங்கு வந்த மகப்பேற்றியல் நிபுணர் சிசேரியன் சத்திரசிகிச்சையினைத் தொடர்ந்து மேற்கொண்டு, ஏற்கெனவே வயிற்றறைக் குழியினுள் பாதியளவு வந்து கிடந்த குழந்தையினை வெளியே எடுத்துக் குழந்தை வைத்திய குழாத்திடம் கையளித்தார். அவர்கள் குழந்தையினை மீள உயிர்ப்பிக்க முயற்சித்தனர். இறுதியாக குழந்தை இறந்து பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. குழந்தையின் எடை 2.630 கிலோ கிராம்.

கர்ப்பப்பையின் பின்பக்கச் சுவரானது வெடித்திருந்தது (posterior uterine wall rupture) அவதானிக்கப்பட்டது. அது பிறப்புறுப்பின் பின்பக்கச் சுவர்வரை நீண்ட வெடிப்பாக (extended as a lot because the posterior vaginal wall) காணப்பட்டது. இந்த வெடிப்பினைச் சரிசெய்வதற்கு மகப்பேற்றியல் நிபுணர் முயன்றாலும், அதனை அணுகுவதில் ஏற்பட்ட சிரமம் (robust entry) மற்றும் தொடர்ந்து கொண்டிருந்த குருதிப் பெருக்கு ஆகிய காரணமாக தாயாரின் உயிரைக் காக்கும் பொருட்டு அவசரமாக கர்ப்பப்பையினை அகற்றும் முடிவினை எடுத்தார். தாயார் இடுப்பின் கீழாக மட்டும் உணர்விழப்பு செய்யப்பட்டிருந்ததால், கர்ப்பப்பையினை அகற்றும் தீர்மானத்தினை மேற்கொண்டது குறித்து சத்திரசிகிச்சையின்போதே அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சத்திரசிகிச்சை நடவடிக்கையின்போது மொத்தம் 3 லீற்றர் இரத்தம் வெளியேறியிருந்ததாக கணிப்பீடு செய்யப்பட்டது. தாயாருக்கு 5 பைந் (2.8 லீற்றர்) இரத்தம் ஏற்றப்பட்டதுடன் ஒருநாள் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துத் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்ட தாயார் 30.06.2023 அன்று வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்களது வாக்குமூலம்

தாயாருடைய வாக்குமூலத்தின்படி மாலை 5 மணியவில் பிள்ளையின் துடிப்பு குறைவதாக கடமையில் இருந்த தாதியருக்கு பல தடவைகள் கூறியதாகவும் அவர்கள் அதனைக் கணக்கில் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகவும் தெரிவித்தார். குழந்தையின் துடிப்பு குறைந்துகொண்டு வருகின்ற போது தாதியர்களிம் தெரிவித்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை, எனக் குறிப்பிடும் அவர் அத்துடன் தம்மை சத்திரசிகிச்சைக் கூடத்திற்குக் கொண்டுசெல்லும் முன்னரே குழந்தையின் துடிப்பு நின்றுபோய்விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

“பிரசவ அறைக்குள் மனைவியை அனுமதித்ததில் இருந்து நான் விடுதி வாசலில் எனது நான்கு வயது பெண் குழந்தையோடு காத்திருந்தேன். மாலை 7.30 வரை வைத்தியர்கள் எவருமே மனைவியை வந்து பார்த்திருக்கவில்லை”. என்று தாயாரது கணவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இனி எங்கள் வாழ்க்கையில் குழந்தை பாக்கியமே இல்லாது போய்விட்டது என கவலையுடன் தெரிவித்தார்.

மருத்துத்துறையினரது கருத்து என்ன?

“தயாரது கர்ப்பகாலம் ஒன்பது மாதங்களைத் தாண்டிவிட்டதாலும், பிரசவம் இயற்கையாக தூண்டப்பட்டு பிரசவ வலி தானாக ஏற்படாத காரணத்தினாலும் செயற்கையாக பிரசவத்தினைத் தூண்டுவது வழமையான நடைமுறை. அதற்குப் பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அதில் ஒரு வழிமுறையே குறித்த தயாரது சிகிச்சையின்போது பின்பற்றப்பட்டுள்ளது” என கிளிநொச்சி வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் “குறித்த முறையில் பிரசவம் தூண்டப்பட்டிருந்தால் தாயாரை தகுந்த கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம். ஏனெனில் குறித்த தூண்டல் அளவுக்கு அதிகமாகினால் அதனால் குழந்தைக்கு ஆபத்து நேரிடலாம். அத்துடன் கருப்பைக் கழுத்து 3 சென்ரிமீற்றர் விரிவடைந்ததும்தான் உண்மையான பிரவச நடைமுறை ஆரம்பமாகிறது. அதன்பின்னர் தாயாரை பிரசவ அறைக்குள் எடுத்து நேரடித் தொடர் கண்காணிப்பில் வேண்டும்.” என்றார்.

இருப்பினும் பணிப்பாளரது அறிக்கையின்படி கருப்பைக் கழுத்து 5 சென்ரிமீற்றர் வரை விரிவடைந்தமையானது மாலை 1.20 மணிக்கு பன்னீர்க்குடம் உடைந்தததை அடுத்தே தெரியவந்துள்ளதாக நாம் கொள்ளவேண்டி உள்ளது. அதாவது உண்மையான பிரசவம் ஆரம்பித்த பின்னரும் தாயார் முழுக் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கவில்லை என்றே தெரிகிறது.

நாம் கலந்துரையாடிய வைத்தியர்களது கருத்தின்படி கர்ப்பப்பையின் கழுத்தானது மூன்று சென்ரிமீற்றர் விரிவடைந்த பின்னர் ஒரு மணிநேரத்திற்கு ஒரு சென்ரிமீற்றர் வீதம் 10 சென்ரிமீற்றர் விரிவடைந்த பின்னரே பிரசவத்தின் இரண்டாவது கட்டம் ஆரம்பமாகும். இதன் பின்னரே குழந்தையானது தாயாரின் பிறப்பு வாசலின் ஊடாகக் கீழே இறங்க ஆரம்பிக்கும்.

ஏற்கெனவே குழந்தை ஒன்றினைப் பிரசவித்துள்ள ஒரு தாயாருக்கு இந்த இரண்டாம் கட்டமானது ஆகக்கூடியது இரண்டு மணிநேரங்களாக அமையும். அந்த இரண்டு மணிநேரத்தினுள் குழந்தை தானாகப் பிறக்காவிடின் மருத்துவர்கள் தகுந்த முறை ஊடாக பிரசவத்தினை மேற்கொள்வதற்கான முடிவினை மேற்கொள்வார்கள்.

அறிக்கையில் பணிப்பாளர் வழங்கியுள்ள தரவுகளின் படி, 27.06.2023 மாலை 5.30 மணிக்குக் கருப்பைக் கழுத்தானது 10 சென்ரிமீட்டர்கள் விரிவடைந்து விட்டது. அப்படியானால் மாலை 7.30 மணிக்கு முன்னர் சுகப்பிரசவம் நடந்திருக்க வேண்டும். ஆனால் மூத்த வைத்தியர் தாயாரை மாலை 7.10 மணிக்குப் பார்வையிட்ட பின்னர் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவித்தது வரையில் செய்யப்பட்ட வைத்திய நடைமுறைகளை, அவை மேற்கொள்ளப்பட்ட நேரத்துடன் வழங்கிய பணிப்பாளரது அறிக்கையானது, அதற்குப் பின்னர் இடம்பெற்ற எந்த நடைமுறைகள் தொடர்பாகவும் நேரத்தினைக் குறிப்பிடவில்லை.

குறிப்பாக “பணிப்பாளரது அறிக்கையில் 7.10 மணிக்குத் தாயாரது நிலவரம் குறித்து அறிவித்தலை மூத்த வைத்தியரிடம் இருந்து பெற்றுக்கொண்ட மகப்பேற்றியல் நிபுணர் எப்போது தாயாரை வந்து பார்வையிட்டார் (நேரம்) என்ற விபரம் இல்லை. அவ்வாறே பிரவசத்தின் இரண்டாம் கட்டம் நீண்டு செல்வதாக எப்போது (நேரம்) மகப்பேற்று நிபுணர் தீர்மானித்தார் என்ற விபரமும் இல்லை.” எனச் சுட்டிக்காட்டினார் ஒரு மகப்பேற்றில் நிபுணர்.

அத்துடன் “இந்தத் தாயாருடைய மருத்துவ அறிக்கைகளின்படி முதலாவது பிள்ளையும் ஆயுதம் மூலமே பிரசவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் தற்போதைய பிரசவமும் ஆயுதம் மூலம் நிகழ்த்தப்படவேண்டும் என மகப்பேற்றியல் நிபுணர் முடிவெடுத்திருந்தால், அதை அவரே செய்திருக்கவேண்டும். ஆனால் பணிப்பாளரது அறிக்கையின்படி ஆயுதப்பிரசவம் மகப்பேற்றியல் நிபுணரால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது தெரியவருகிறது.

பணிப்பாளரது அறிக்கையின் பிரகாரம் அவசர சிசேரியனும் மகப்பேற்று நிபுணரால் செய்யப்படவில்லை. அதனைச் செய்த மூத்த வைத்தியர் வயிற்றறைக் குழியினைத் திறந்து பார்க்கும் வரையில் கர்ப்பப்பை வெடித்திருந்தது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்தச் சத்திரசிகிச்சை நடைபெறும்போது மகப்பேற்றியல் நிபுணர் சத்திரசிகிச்சைக் கூடத்தினுள் இருக்கவில்லை என்பதும் பணிப்பாளரது அறிக்கையில் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது.” என்றார் அவர்.

மேலும் “இந்தப் பிரசவம் தொடங்கியதில் இருந்து நிறைவடையும் வரை குழந்தையினது இதயத்துடிப்பு மற்றும் தாயாரின் (இதயத்துடிப்பு சுவாச வீதம் முதலிய) கணியங்கள் சாதாரணமாகவே இருந்தன என பணிப்பாளரது அறிக்கை கூறுகிறது. ஆனால் கர்ப்பப்பை வெடித்தமையினை அடுத்து குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் தாயாரது கணியங்களில் சடுதியான மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

உரிய மருத்துவக் கண்காணிப்புகள் வழங்கப்பட்டிருந்தால், கர்ப்பப்பை வெடித்திருந்தமையை சிசேரியன் செய்வதற்கு முன்பாகவே கண்டறிந்திருக்க முடியும்;” என்றவர்; “பணிப்பாளரது அறிக்கையானது மருத்துவரீதியாக பல தகவல்களைக் கூறாமல் கூறுகிறது. சரியான விததத்தில் இது தொடர்பான மருத்துவத் தணிக்கை விசாரணைகள் (Medical audit) மேற்கொள்ளப்பட்டால் ஏற்பட்ட மருத்துவ மற்றும் நிர்வாகத் தவறுகளை இனம்காணவும் எதிர்காலத்தில் அவற்றினைத் தடுக்கவும் முடியும்.” எனக் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் பணியாளர்கள் தமது அடையாளங்களை வெளிப்படுத்தவேண்டாம் என்ற வேண்டுதலுடன் வெளிப்படுத்திய தகவல்கள் எமக்கு ஏற்பட்ட சந்தேகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

அவர்களது தகவல்களின் படி “குறித்த தாயார் பிரசவ அறையில் நீண்ட நேரமாக சுகப்பிரசவம் ஆகாமல் போராடிக்கொண்டிருந்தபோது அவரைப் பார்வையிட்ட மகப்பேற்றுத்துறையில் பல்லாண்டு அனுபவம் உடைய மூத்த வைத்தியர் ஒருவர் குறித்த தாயாருக்கு சிசேரியன் மூலம் பிரசவம் மேற்கொள்வதற்கு மகப்பேற்றியல் வைத்திய நிபுணருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த ஆலோசனை ஏற்கப்படவில்லை”.

“பின்னர் இதே மூத்த வைத்தியர்தான் கீழே இறங்கியிருந்த குழந்தையின் தலையானது மீண்டும் மேலே சென்றுள்ளதை கண்டுபிடித்து தாயாரது கர்ப்பப்பையானது வெடித்திருக்கலாம் என்ற ஊகத்தினை முதன் முதலில் மகப்பேற்றியல் நிபுணருக்கு அறிவித்திருந்தார். அதனையடுத்தே அவசர சிசேரியன் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

அவ்வாறாயின் “குறித்த தகவல் எவ்வாறு அறிக்கையிடப்படாமல் போனது?” என்று கேட்டபோது “நோயாளரின் தலைமாட்டு அறிக்கையில் (BHT) அவர்களால் எழுதப்படுவதே இறுதியானதாகும். அந்த அறிக்கையினை சரியான முறையில் எழுத மாட்டார்களா என்ன?” என்று பதில் கேள்வி எழுப்பினார்கள்.

தமது சந்தேகத்திற்கு ஆதாரமாக குறித்த சம்பவம் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணைக் குழுவில் இருந்து தாமாக விலகுவதாக அதற்கான காரணங்ளோடு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்து அனுப்பிய கடிதத்தினை கூறுவதோடு, அந்தக் கடிதத்தில்

“தம்மைச் சுற்றி இடம்பெறும் சம்பவங்கள் குறித்த விசாரணையினை உண்மையாகவும் முழுமையாகவும் நடாத்தி முடிக்க முடியாது என்பதை உணர்த்துவதாகவும், அதனால் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினராகச் செயற்படுவதில் இருந்து தாமாக விலகிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறித்த விசாரணையினை மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படும் விசாரணைக்குழுவினரிடம் பாரப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளார்” என விளக்குகிறார்கள்.

சட்டவாளர்களது கருத்து

நாம் தொடர்புகொண்ட சட்டவாளர்களது கருத்தின்படி குறித்த தாயார் தனது பாதிப்பிற்கான சட்டரீதியான நிவாரணத்தினை தகுந்த சட்ட ஆலோசனையின் ஊடாகப் பெற முயற்சிக்க வேண்டும். தவறுகள் நடந்திருப்பின் அதுவே அவை மீள நிகழாமல் தடுப்பதற்கான வழியாகும்.

சட்டவாளர்கள் கூறுவதன்படி “மருத்துவத் தவறுகள் பொதுவாக குடியியல் சட்டத்தின் ஊடாகவே அணுகப்படுகிறது. அதாவது அவைகள் வேண்டும் என்று செய்யும் குற்றம் அல்ல என்று கருதப்படுகின்றன. இலங்கையில் இவ்வாறான மருத்துவத் தவறுகளைக் கையாள்வதற்கான விசேட சட்டங்கள் இல்லை என்பதால் ரோமன் டச்சு சட்டம் தான் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.”

“இந்தச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் மூன்று விடயங்களை நீரூபிக்க வேண்டும். அதாவது பாதிப்பை ஏற்படுத்தியவர் அவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தாதிருக்கும் கடப்பாடு உடையவர் (கவனக்கடப்பாடு/duty of care) என்பது முதலாவதாக நிரூபிக்கப்படவேண்டும். சுகாதாரத்துறையினர் அந்தக் கட்டப்பாட்டினைக் கொண்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.”

“அடுத்துக் குறித்த கடப்பாடு அவர்களால் மீறப்பட்டிருப்பதாக நிரூபிக்க வேண்டும். இறுதியாக, அவ்வாறு கவனக் கடப்பாடு மீறப்பட்டதால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அளவிடக்கூடிய ஒரு இழப்பு நேரிட்டிருக்க வேண்டும்.”

“இருப்பினும் குறித்த பாதிப்பானது பாரதூரமான கவனக்குறைவினால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குற்றவியல் சட்டத்தின் ஊடாகக் கையாளப்படுவதற்கும் வாய்ப்புகள் உண்டு” .

அவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட தாயார் நீதியையும் இழப்பீட்டினையும் பெற்றுக்கொள்வதற்கும் அவ்வாறான பாதிப்புகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கும் உதவப்போகிறவர்கள் யார் என்பதே இப்போதுள்ள கேள்வி
– மு.தமிழ்ச்செல்வன்

Exit mobile version