Home jaffna news மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

மக்களின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – இயக்குனர் செல்வமணி.!

மக்கள் சிறிய அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். அந்த அச்சம் உள்ளுக்குள் இருக்கின்றது. அந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய வேலை என தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் தைப்பூச தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் நடைபெற்ற புதிரெடுக்கும் பொங்கல் விழா  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அச்சமின்றி சகல மக்களும் சர்வ சுதந்திரமாக, இணக்கமாக வாழ ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது உலக அரசுகள், உலக மக்கள் மற்றும் இலங்கை அரசின் கடமையாகும்.

எங்கு சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ, எங்கு சுதந்திரம் நிராகரிக்கப்படுகிறதோ அங்கு போராட்டமும் எழுச்சியும் தவிர்க்க முடியாத ஒன்று. இலங்கை அமைதியாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். எல்லா மக்களும் சதந்திரத்தை விரும்புகின்றார்கள். நிச்சயமாக ஒரு நல்ல விடிவு ஏற்படும் என நினைக்கிறேன்.

மக்கள் இப்பொழுதுதான் மீண்டு எழுந்து கொண்டு இருக்கிறார்கள். இது நல்ல ஒரு வளர்ச்சியாக இருக்கவேண்டும் என அனைத்து மக்களையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் விஜயகாந்த் அவர்களது இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளேன். என்னை இயக்குனராக அவர்தான் அறிமுகப்படுத்தினார். புலன் விசாரணை மற்றும் அவரது நூறாவது படமான கேப்டன் விஜயகாந்த் ஆகிய படங்களை இயக்கினேன். 30 ஆண்டு காலம் அவருடன் நெருங்கிப் பழகினேன். அவர் ஒரு சிறந்த மனிதர். அவரது நினைவுகள் உலகத் தமிழர்களிடத்தில் எப்போதும் இருக்கும். தமிழர்களுக்காக பெரிய போராட்டங்களை முன்னெடுத்து நடாத்தியவர் அவர். அவர் இப்போது மனிதர்களால், கடவுளாக மதிக்கப்படுகிறார் என்றார்.

Exit mobile version