Home Uncategorized மாங்குளம் அம்புலன்ஸ் சேவை மூன்று மாதமாக இடைநிறுத்தம்.!

மாங்குளம் அம்புலன்ஸ் சேவை மூன்று மாதமாக இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை(1990)  கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள  மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990) வண்டியானது  பிரதானமாக ஏ 9 வீதியில் இடம்பெறும் விபத்துகளின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி,கோட்டைகட்டிய குளம், அம்பலப்பெருமாள் மற்றும் அம்பகாமம் தச்சடம்பன், ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களும் இந்துபுரம், வசந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும்  நாளாந்தம் இந்த சேவையைப் பெற்றுவரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த அம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால்  மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள்  தள்ளப்பட்டுள்னர்.

குறிப்பாக நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபாய் வரையில் ஆட்டோவுக்கு செலவழிக்க வேண்டும். ஆகவே இந்த அம்புலன்ஸ் சேவையை மீண்டும்  மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், முள்ளியவளை, மணலாறு பகுதிகளின் 1990 இலவச அம்புலன்ஸ் வண்டிகள் மாதக் கணக்காக  திருத்தப் பணிகளில் உள்ளதாகவும் இவற்றை விரைவாக நிறைவு செய்து சேவையில் ஈடுபடுத்தும் வகையில் உரிய தரப்பினர் கவனமெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது