Home இலங்கை செய்திகள் மலையகத்தில் பழங்களை திருடியவருக்கு நேர்ந்த கதி..!

மலையகத்தில் பழங்களை திருடியவருக்கு நேர்ந்த கதி..!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் பழங்கள் மற்றும் மரக்கறி  விற்பனை செய்யும் கடை ஒன்றில் 46,000 ரூபாய் பெறுமதி மிக்க பழங்களை திருடிய நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு பழக்கடை உரிமையாளர் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய நுவரெலியா பொலிஸ் தலமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹட்டியாராச்சியின் உத்தரவின் பேரில், குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, விசாரணைக்காக நியமிக்கப்பட்டிருந்த 4603 சுரவீர, 60326 ஹேரத் மற்றும் 104705 ரணசிங்க ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுப்பட்டு சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காணொளி உதவியுடன் சந்தேக நபரை  கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் லபுக்கலை குடா ஓயா பகுதியைச் சேர்ந்த (44) வயதுடையவராவார். இவரை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் சந்தேக நபரிடம் வாக்கு மூலம் பெற்று பின் நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபரை இம்மாதம் (26) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.