அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம் செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் பக்கத்து வீட்டு காரர் பராமரித்து வரும் விவசாய காணிக்கு சட்ட விரோதமாக மின்சாரம் பாய்ச்சியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர் அதிகாலையில் குறித்த காணியின் பகுதிக்கு ஏன், எதற்காக சென்றார் என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் உயிரிழந்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து பார்வையிட்டு மரண விசாரணை செய்த பின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.