Home இலங்கை செய்திகள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் ஆக்கிரமிப்பு இடம் பெறுகிறது..!

யுத்தம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் ஆக்கிரமிப்பு இடம் பெறுகிறது..!

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து சுமார் 15 வருடங்களையும் கடந்து உள்ளது.ஆனால் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு வடிவங்களில் காணிகள் ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.

‘எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள்’ எனும் தொனிப் பொருளில் வட மாகாண ரீதியாக இராணுவம்,கடற்படை மற்றும் ஏனைய திணைக்களம் வசம் இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தத்தை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (4) மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னாரில் இருந்து தபால் மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

-குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

வடமாகாண ரீதியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மற்றும் முப்படையினர் கையகப்படுத்தி குறித்த காணிகளில் வணிக செயற்பாடுகள் மற்றும் விவசாய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் காணிக்கு சொந்தகாரரான மக்கள் காணிகள் இன்றியும் வாடகை வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

அரச படைகள்,வன வள திணைக்களம் ,தொல்பொருள் திணைக்களம்,மற்றும் சிங்கள மயமாக்கல் எனும் வடிவத்தில் பல்வேறு வழிமுறைகளில் மன்னார் மாவட்டத்தில் மட்டுமல்ல.வடக்கில் காணி இவ்வாறு சூரையாடப்படுகிறது.

எமது காணிகளை விடுவிக்க கோரி பல்வேறு விதமான சாத்தியப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு மாற்று வடிவமாக ஜனாதிபதியின் செயலகத்திற்கு 5 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (4) மன்னார் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.காணிகளை ஏதோ ஒரு வகையில் இழந்த மக்கள் எங்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.