Home இலங்கை செய்திகள் அரச ஊழியர்கள்-ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

அரச ஊழியர்கள்-ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவினை வழங்குவது நெருக்கடிக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

 

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்குவதில், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகளை வழங்குவதில், ஓய்வூதியம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதற்கு அரசாங்கம் சொல்லும் நாங்கள் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை, சுற்றுலாப் பயணிகள் மட்டும் தான் வருகின்றார்கள், நாங்கள் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி கிடைக்கவில்லை என்றெல்லாம் கூறும்.

 

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், இந்த வரி திருத்தத்தின் ஊடாக மிகப்பெரிய வருமானம் ஒன்றை அரசாங்கம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதேசமயம், தனியார் துறையில் இருந்து வரி செலுத்துபவர்களின் நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. இதனால் இந்த வரி கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.

 

வரி அடித்தளத்தை விரிவாக்க வேண்டிய ஒரு தேவையும் இருக்கின்றது.

ஆனால் இன்னும் கூட இலகுவாக இலக்கு வைக்கக் கூடிய தரப்பினைத் தான் அரசாங்கம் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றதே ஒழிய முறையான ஒரு விரிவாகத்தைச் செய்து வரி வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கான பணிகள் மந்த கதியிலேதான் இருக்கின்றது.

 

மேலும், இலங்கை அரசாங்கமானது தற்போது இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தான் தெரிகிறது. அந்த பக்கம் போனாலும் சுடும், இந்தப் பக்கம் போனாலும் சுடும். தேர்தல் வருகின்றது. ஆகவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலில் தோல்விதான்.

 

மறுபக்கம் பணம் என்பது மிக பிரச்சினையான ஒன்றாக மாறியிருக்கின்றது. அரசத் துறையில் உள்ள ஊழல்களை, சம்பள அதிகரிப்புக்களை குறைத்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறுவார்கள்.

 

நாடாளுமன்றத்தில் உள்ளவர்களின் சம்பள அதிகரிப்பை குறைத்தால் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதுதான்.. ஆனால் எங்கிருந்தாவது ஒரு இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அல்லவா.

சாதாரண அரச ஊழியர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிக அதிகம். ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கையும் அதிகம். எதிர்வரும் காலங்களில் அது இன்னும் அதிகரிக்கப் போகின்றது.

 

ஆகவே அதற்கான தயார்ப்படுத்தல்கள் அவசியம்.

இப்போதிருக்கின்ற நிலைமையிலே, இலங்கை அரசாங்கத்தினுடைய வருமானங்களை ஈட்டுவதற்குரிய மூலங்கள் இந்த அரச மற்றும் தனியார் ஊழியர்களை கசக்கிப் பிழிந்து வரி மூலம் வருமானத்தை ஈட்டுவதுதான். ஏனைய வரி வருமான மூலங்களைப் பொறுத்தவரையில் இவ்வாறான துரித அதிகரிப்பை காண முடியவில்லை.

ஆகவே அப்படியிருக்கின்ற ஒரு சூழலிலே ஐம்எப் இனுடைய இலக்குகளை அடைவதோ, அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கொடுப்பனை அதிகரித்து கொடுப்பதோ எதிர்காலத்தில் நெருக்கடிக்குள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.