அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதி (சனிக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதலாம் கட்ட பெயர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து கிடைக்கப்பெற்ற 1,227000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீட்டில் 212,000 முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகள் ஒரு தரப்பினரால் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய 966,000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் முறையாக கிடைக்கப் பெற்றுள்ளன.749,000 முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதுடன்,மேலும் 2 இலட்சமளவிலான முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்படவுள்ளன. முறைப்பாடு மற்றும் மேன்முறையீடுகள் ஊடாக 10,000 பேர் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக தரப்படுத்தப்பட்டுள்ளனர்.முறையற்ற வகையில் தரவுகளை முன்வைத்து கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து மீளவும் கொடுப்பனவுகளை அறவிடுவதற்கான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.