ஆங்கிலம் தொடர்பாடல் தேசிய வேலைத்திட்டத்தின் வடக்கு மாகாணத்திற்கான செயற்றிட்டம், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று (04.03.2024) ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ZOOM ஊடாக கௌரவ ஆளுநர் கலந்துக்கொண்டார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
தரம் ஒன்று மாணவர்களுக்கு ஆங்கில தொடர்பாடல் முறையை அறிமுகப்படுத்தும் தேசிய வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படுவதுடன், தரம் ஒன்று மாணவர்கள் ஆங்கிலம் மொழியை பேசவும் இந்த திட்டத்தினூடாக பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில், தரம் ஒன்று மாணவர்களுக்கு இவ்வாறான செயற்றிட்டத்தை ஆரம்பித்தமை மகிழ்ச்சி அளிப்பதாக கௌரவ ஆளுநர் தனது உரையின் போது குறிப்பிட்டார். தாய் மொழி எவ்வளவு முக்கியமானதாக காணப்படுகிறதோ, அதேபோல சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆங்கில மொழியும் இன்றியமையாத ஒன்று என கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
உலகளாவிய ரீதியில் சவால்களை எதிர்கொள்ள ஆங்கில மொழியை அறிந்திருத்தல் அவசியம் என தெரிவித்த கௌரவ ஆளுநர் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டத்திற்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.