Home Uncategorized ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – மன்னார் கள்ளியடி மக்கள் கோரிக்கை.!

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்க – மன்னார் கள்ளியடி மக்கள் கோரிக்கை.!

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்துள்ளனர்.மேலும் கள்ளியடி பாடசாலையில் கடமையாற்றும் அதிபரை இடமாற்றம் செய்து கள்ளியடி பாடசாலையில் அதிபர் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இல்லாமல் கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள் இதற்கு மடு வலயக் கல்விப் பணிப்பாளரின்   செயல்திறனற்ற தன்மையே காரணம் என கள்ளியடி கிராம மக்கள், பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விபரம்

 திருமதி.தஸ்ப்பீறுகா முகம்மது மிப்லால் 26.07.2022 ஆம் திகதியும்,

திருமதி.பாத்திமா நஸ்ரின் முகம்மது அஸார்  05.10.2023 ஆம் திகதியும் இணைப்பில் சென்றுள்ளனர்.

இங்கு இணைப்பில் இடமாற்றம் செய்வது என்பது கள்ளியடி பாடசாலையில் இருந்து குறித்த ஆசிரியர்களுக்கு சம்பளம், மற்றும் நியமன பாடசாலையில் உள்ள அனைத்து பதிவுகளும் காணப்படும் ஆனால் அந்த குறித்த ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளில் தங்களுடைய பணிகளை புரிவார்கள் இதுவே அந்த இணைப்பின் கருத்தாகும்.

இவ்விருவரின் இணைப்பு தொடர்பாகவும்  கள்ளியடி பாடசாலையின் நிலை தொடர்பாகவும் 10.10.2023 அன்று வலயம் கோட்டம் மாகாணத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சபையால் மனு அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு பதிலாக 16 .10 .2023 அன்று NP /20/42/(2)/1/S.DO/ 19 கடிதத்திற்கு அமைவாக 01.01.2024  மன்/கள்ளியடி அ.த.க பாடசாலையில் கடமையை மீண்டும் பொறுப்பேற்கும்படி திருமதி.தஸ்பீறுகா முகம்மது மிப்லால் அவர்களுக்கு இணைப்பினை முடிவுறுத்தல் செய்யும் கடிதமும், 27 .01.2023 அன்று NP/20/42(2)/1/S.DO/18 இலக்க கடிதத்திற்கு அமைவாக 01/01/2024 திகதி மீண்டும் மன்/கள்ளியடி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கும் படியாக திருமதி பாத்திமா நஸ்ரின் முகம்மது அசார் அவர்களுக்கு இணைப்பை முடிவுறுத்தல் செய்யும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் 22/11/2023 NP/20/42(2)/1/S.DO/18 ம் இலக்க கடிதத்தின் பிரகாரம் திருமதி.தஸ்பீஹா முகம்மது மிப்லால் அவர்களின் இணைப்பு மீண்டும் நீடிக்கப்பட்டு கள்ளியடி பாடசாலைக்கு கடிதம் அனுப்பி  வைக்கப்பட்டது

இந்நிலையில் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன்  பாடசாலைக்கு அதிபர் கூட இல்லை .அத்தோடு இரு ஆசிரியரின் வெற்றிடத்தை பூர்த்தி செய்ய எந்தவித ஏற்பாடும் மடு  வலயம் செய்யவில்லை.

இந்நிலையில் 08/012024 அன்று NP/20/42(2)/1/TR -CO 2021 /2022 இலக்க கடிதத்தின் பிரகாரம் திருமதி மகேந்திரன் கௌசல்யா ஆசிரியர் புதிதாக நியமனம் பெற்று வந்தார் அவரும் வந்தவுடன் எம் பாடசாலையில் கையொப்பம் இட்டவுடன் இணைப்பில் செல்லும் அனுமதியும் மடு கல்வி பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ட்ரைன் இடம் பெற்று வந்தார். 

மன்னார் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட   பாடசாலையில் அதிபர் இல்லாத காரணத்தினால் முதலில் கையொப்பம் இடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் வலயக்கல்வி பணிப்பாளரின் தொலைபேசி உரையாடல் மூலம் வலுக்கட்டாயமாக கையொப்பம் வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னரே எம் பாடசாலையில் 05 .01.2024 இல் கையொப்பம் இட அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது எமது பாடசாலையில் 3 ஆசிரியர்கள் உள்ளார்கள். இவர்களுள் திருமதி.ஜெகதீஷ் லெம்பேட் யூயின் அனற் 23 /03/ 2024 திகதியுடன் எம் பாடசாலையில் இருந்து மகப்பேறு விடுமுறையில் செல்வதால் இப் பாடசாலையில் இரு ஆசிரியர்களே உள்ளனர்.

இந் நிலையில் பாடசாலை கற்றல் கற்பித்தல் நடவடிக்கை மேற்கொள்வது எப்படி?என்ற கேள்வியை அக்கிராம மக்கள் முன் வைத்துள்ளனர்.

5 வருடங்களாக 100  வீதம் சித்தியில் துலங்கிய பாடசாலை வீழ்ச்சி நிலைக்கு  செல்வதற்கு கல்விச் சமூகமே காரணமாகும் என விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஒரு பாடசாலையில் 3 ஆசிரியர் இணைப்பில் சென்றால் பாடசாலையை இயக்குவது எப்படி?எனவும்,மடு கல்வி பணிப்பாளர் திருமதி.அ.கி.வொலன்ட்ரைன் அவர்களின் தன்னிச்சையான  செயற்பாட்டால் இன்று கல்வி கேள்விக்குறி ஆன நிலையில் கள்ளியடி பாடசாலை உள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து மாகாண ரீதியில் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குறித்த பாடசாலையில் கல்வி வளர்ச்சியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.