குருநாகலில் உள்ள பிரபல கலப்பு பாடசாலையொன்றில் இளம் மாணவிகள் குழுவொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் வெல்லவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போது, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இத் துஷ்பிரயோக சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதம் பதிவாகியிருந்ததாகவும், சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் சேவையில் தெரிவிக்காமல் இடம் விட்டு இடம் மறைந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாண கல்வி திணைக்களத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தமக்கு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து, பெற்றோர்கள் மற்றும் பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் குழுவொன்று குருநாகல் மாவட்ட செயலாளரிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய குருநாகல் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகநபர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பாடசாலையில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் ஐந்து இளம் பெண் மாணவிகளை ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் அவர்களின் உடலை தொட்டு துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னர் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், ஐம்பத்தேழு வயதுடைய திருமணமாகாத ஆசிரியர் எனவும், ஓய்வு பெறுவதற்கு சுமார் ஒன்றரை வருடங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் இப்பாடசாலையில் ஆங்கிலம் கற்பிக்கும் போது மாணவிகளை ஆசிரியர் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து சம்பவம் பகிரங்கமாகியதாகவும் கூறப்படுகிறது.
துஷ்பிரயோகத்திற்கு ஆளான மாணவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமும் இந்த சம்பவம் பாடசாலைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகக் கூறிய அதிபர், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்த போதிலும் நியாயமான விசாரணைகள் இடம்பெறவில்லை என பெற்றோரும் முன்னாள் மாணவர்களும் குருநாகல் மாவட்ட செயலாளரிடமும் இறுதியாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் பணிப்புரையின் பிரகாரம் குருநாகல் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல சந்தேக நபரிடம் குருநாகல் தலைமையக பொலிஸில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.