குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் பயிலும் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு பாடசாலையின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வந்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ஆர். ரத்நாயக்கவின் கோரிக்கைக்கு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட அலுவலகம் இந்த விசாரணைகளை மேற்கொண்டது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குருநாகல் மாவட்ட செயலாளரிடம் பெற்றோர்கள் குழு முறைப்பாடு செய்திருந்தது.
அதன்படி, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் குருநாகல் மாவட்ட உளவியல் உத்தியோகத்தர் காஞ்சனா சுபசிங்க, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான சமிர ராமநாயக்க மற்றும் லக்மினி தர்மதாச ஆகியோர் இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுபவர்கள் , அவர்களின் பெற்றோர்கள், பாடசாலையின் அதிபர் மற்றும் வடமேற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி முதிதா ஜயதிலக ஆகியோரிடமும் விசாரணைக் குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
விசாரணை அறிக்கையின்படி, சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் நான்கு மாணவிகளை பள்ளி நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆசிரியர் தான் பணிபுரியும் பாடசாலையில் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அவர் இருந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னறிவிப்பின்றி வருகை தராமையினால் சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த ஆசிரியர் தொடர்பான அறிக்கையை பாடசாலை அதிபர் குருநாகல் பிராந்திய கல்வி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.