நாட்டின் பல பகுதிகளில் 4 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொலைகள் நேற்று (24) பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிடிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஆராச்சிகொட – பிடிகல பகுதியில், மகன் தனது தந்தையை கோடரியால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதில் அந்த பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
47 வயதுடைய சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் இதற்கு முன்னர் அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கம்புருபிட்டிய – நாரந்தெனிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இறந்தவர் தாயுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், தாய் இல்லாத நேரத்தில் குடித்துவிட்டு வந்து பக்கத்து வீட்டுக்காரருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் மற்ற நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நாரந்தெனிய கிழக்கு – கம்புருபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்புருபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குட்டிகல – துங்கம பிரதேசத்தில் தந்தை மகனால் கொல்லப்பட்டுள்ளார். அம்பகஸ்கமுல்ல – துங்கம பகுதியைச் சேர்ந்த 84 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரும் சந்தேகநபரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாங்குளத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.