இந்திய அத்துமீறிய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை உலகத்திற்கு வெளிப்படுத்தும் ஊடகங்களின் மூலம் எமது போராட்டத்திற்கு கிடைக்கும் என யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்தார்.
இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பருத்தத்துறை பகுதியில் இருந்து இலங்கை கடல் எல்லை வரை இடம் பெற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிரான கறுத்தக்கொடி போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அத்துமீறிய இந்திய மீனவர்களினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வரும் நிலையில் எமது கண்டனத்தையும் எமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தும் முகமாக இலங்கை கடல் எல்லை வரை எமது கறுத்தக்கொடி போராட்டத்தை முன்னெடுத்தோம்.
இதற்கு முன்னரும் அத்துமீறிய இந்திய கடற்தொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தோம் ஆனால் தொடர்ந்தும் அவர்களது வருகை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் முகமாக கடல் வழியாக இலங்கை எல்லை வரை எமது கறுத்தக் கொடிப் போராட்டத்தை முன்னெடுத்தோம்.
இந்தப் போராட்டம் ஒரு ஆரம்பப் போராட்டமாகவே பார்க்கிறோம். ஏனெனில் நாம் எமது கடல் எல்லை வரை போராட்டத்தை முன்னெடுத்தோம் இந்திய எல்லைக்குச் செல்லவில்லை.
இந்தியா எல்லைக்கு செல்வோமாயின் என்ன நடக்கும் என்பதும் எமக்குத் தெரியும், அது பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.
எமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் நேற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் எமது அடுத்த போராட்டம் உயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் இந்தியா எல்லைக்குள் நுழைந்து எமது எதிர்ப்பை வெளியிடுவதே அடுத்த இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.