கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலத்தில் 106 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகளை சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகள், பொலிஸார் மற்றும் நீதிமன்றத்திற்கு வழங்காத காரணத்தினால், குற்றவாளிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
அண்மையில் நடைபெற்ற கிளி நொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குற்றவாளிகள் சம்பந்தமாக மற்றும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகள் தொடர்பாக பொலிஸார் மற்றும் நீதிமன்றம் கோரிய அறிக்கைகள் கிடைக்காது பாரிய சிக்கலான நிலைமை என கேள்வி எழுப்பியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய மருத்துவர்களின் இடமாற்றங்கள் இந்த பிரச்சினைக்கு காரணம் எனவும் கிளிநொச்சி வைத்தியசாலைகளில் போதுமான ஊழியர்கள் இல்லாததும் மருத்துவ அறிக்கைகள் தாமதமாவதற்கு காரணம் என அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து தனிப்பட்ட ரீதியில் தேடி அறிந்து, எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அறிக்கைகள் கிடைக்க செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.