கொழும்பு – புறநகர் பகுதியான இரத்மலானையில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவுப் பொருளில் கரப்பான் பூச்சிகள் இருந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்ற நபர் சிற்றுண்டிகளை வாங்கியுள்ளார்.
எனினும், வாங்கிய சிற்றுண்டியில் உயிரிழந்த நிலையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை அவதானித்த அந்த நபர் குறித்த உணவகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், அதற்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என அந்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் அண்மைய நாட்களாக உணவுப் பொருட்களில் உயிரிழந்த நிலையில் பூச்சி, பல்லி, புளு, எலி மற்றும் தவளை இருக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
வெதுப்பக உணவுப் பொருளில் பல்லி
இப்பலோகம நேற்று முன்தினம் வாங்கிய வெதுப்பக உணவுப் பொருளில் உயிரிழந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து கடை உரிமையாளர், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும், முறைப்பாடு செய்த நபர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவளை ஐஸ்கிரீம்
இதேவேளை, யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் பதிவாகியிருந்தது.
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.
இதனையடுத்து குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தள்ளு வண்டிக் கடையில் எலிகள்
கண்டி – பேராதனை பகுதியில் உள்ள உணவு தள்ளு வண்டிக் கடையில் எலிகள் இருந்த காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த கடையில் இருந்த உணவுகளை எலிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிப்பட்டிருந்தன.
இவ்வாறான அண்மையச் சம்பவங்கள் உணவுப் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.