கொழும்பு, ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மொஹமட் ரில்வான் என்ற 55 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பிரபல போதைப்பொருள் வியாபாரியான புக்குடு கண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என தற்போது தெரியவந்துள்ளது.
இவர் ஹேனமுல்ல மெத்சந்த செவன வீடமைப்புத் தொகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்குடு கண்ணாவுக்கும் குடு செல்வியின் மகன் ரிமோஷனுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகிலுள்ள நியூஹாம் சதுக்கத்தில் இன்று (25) பிற்பகல் 1.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த ரில்வான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கோழி இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகில் வந்து இந்த துப்பாக்கி சுட்டை நடத்திவிட்டு தப்பிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.