தமது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நண்பனின் உடலை காண வந்த பேரறிவாளன்
தமது நண்பன் சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைக்கு ஏங்கிய சாந்தனின் இறுதி பாடல் – அரசுகளின் மனதை தொடும் உருக்கமான கடைசி கடிதம்
உயிரிழந்த சாந்தன் இறுதியாக எழுதிய கடிதம் என்ற வகையில் அவருடைய கையெழுத்துடனான கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கல்லீரல் செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு
கல்லீரல் செயலிழப்பு காரணமாகவே சாந்தன் உயிரிழந்துள்ளதாக ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேணிராஜன் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை அளித்த போதும் இன்று காலை 07.50 இற்கு சாந்தனின் உயிர் பிரிந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சகோதரனுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம்
சாந்தன் தனது சகோதரனுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தனை அவரது சகோதரர் மதிசுதா கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு
சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சாந்தன் இன்று காலை உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
நளினி வைத்தியசாலை வருகை
உயிரிழந்த சாந்தனின் உடலை காண்பதற்காக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நளினி வைத்தியசாலைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாந்தன் காலமானார்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் காலமாகியுள்ளார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த 2022 ஆம் ஆண்டு விடுதலைசெய்யப்பட்ட சாந்தன், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்த வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை சாந்தன் விடுத்திருந்த நிலையில், அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த ஜனவரி 24ஆம் திகதி உடல் நல குறைவால் திருச்சி அரச வைத்தியசாலையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டிந்தார்.
குடும்ப உறுப்பினர்கள் மறுப்பு
தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்கான சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவரது மரணத்தை குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தவில்லை. சாந்தனின் சகோதரனை ஒருவன் செய்திப் பிரிவு தொடர்புகொண்டு கேட்டப் போது அவர் இதனை மறுத்திருந்தார்.
சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரை இன்று இரவு இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாந்தனின் வருகைக்காகவும், அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் சாந்தனின் தாயார் நீண்ட நாளாக காத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது