வடக்கு பிரான்சில் இருந்து பிரித்தானியாவிற்கு 16 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (03) காலை ஆங்கிலக் கால்வாயில் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் நோர்ட் திணைக்களம் தெரிவித்துள்ளது.
படகில் அதிகளவான நபர்கள் பயணம் மேற்கொண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது படகில் 10 சிறுவர்களும், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட மொத்தம் 16 பேர் இருந்துள்ளனர்.
அவர்களில் எவரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணியவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
சம்பவத்தில் மீட்கப்பட்ட அனைவரும் டன்கிர்க்கில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜனவரி 14 அன்று இலங்கிலாந்துக்கு சட்டவிரோத கடல் பயணம் மேற்கொள்ள முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் இறந்ததைத் தொடர்ந்து அண்மைய மரணம் ஏற்பட்டது.
2023 ஆம் ஆண்டில் 29,000 பேர் சிறிய படகுகளில் இங்கிலாந்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை 2,000க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்துக்கு வந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.