ஆங்கிலக்கால்வாயில் மீண்டும் ஒரு புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிய துயரம் நிகழ்ந்துள்ளது.
நேற்று, ஆங்கிலக்கால்வாயில், பிரெஞ்சுக் கடற்கரை பகுதியில், புலம்பெயர்ந்தோர் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்கள். சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் கடற்கடைப் படகுகள் இரண்டும், ஹெலிகொப்டர் ஒன்றும் விரைந்துள்ளன.
அவர்களில் ஒரு பெண்ணை மீட்ட மீட்புக் குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல், அவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். தண்ணீரில் மூழ்கிய மற்ற இருவரைக் காணவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உண்மையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல், நேற்று வரை, ஆங்கிலக்கால்வாயில் சிறுபடகுகளில் பயணித்த 180 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். 10 குழுக்களாக வெவ்வேறு படகுகளில் பயணம் மேற்கொள்ள முயன்ற அவர்களை அதிகாரிகள் மீட்டுள்ளார்கள்.
அந்த படகுகளில் ஒன்று, இரண்டு பாதிகளாகக் கிழிய, அந்த படகு கரைக்கு சற்று அருகில் இருந்ததால், அதிலிருந்தவர்கள் பத்திரமாக கரைக்குத் திரும்ப முடிந்துள்ளது.