Home Accident news மன்னாரில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதியை காப்பாற்றிய பொலிஸார்?

மன்னாரில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதியை காப்பாற்றிய பொலிஸார்?

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு பகுதியில் நேற்று(19) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக் கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் இருந்த மக்கள் மீது கடுமையாக தாக்கியதுடன், விபத்தை ஏற்படுத்திய பேருந்தையும், அதன் சாரதியையும் காப்பாற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி, பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து சற்று தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் சிறிய ரக பேருந்து ஒன்று மன்னார் யாழ். பிரதான வீதியூடாக பயணித்த போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது கோயில் குளம் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பகுதி அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாக காணப்பட்ட போதும், இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உண்மை நிலையை அறிந்து கொள்ளாது உயிரிழந்த மற்றும், படு காயமடைந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தில் கூடிய போது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதோடு, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தையும், அதன் சாரதியையும் மீட்டு இலுப்பைக் கடவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலத்தை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்ப இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இலுப்பைக்கடவை பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் கோர விபத்தை ஏற்படுத்திய-மன்னாரில் கோர விபத்தை ஏற்படுத்திய சாரதியை காப்பாற்றிய பொலிஸார்?-oneindia news

Exit mobile version