மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (24.08.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோக நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மன்னார் – நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஒருவரும் குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-43) மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) ஆகிய இரு குடும்பஸ்தர்கள் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. -கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
மேலும், பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.