Home இலங்கை செய்திகள் யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

யாழ்.பல்கலை மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!

யாழ் . பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிசார் இன்று காலை கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொலிஸ் நிலையத்தினை விட்டு தப்பியோடிய மாணவன் தனது உயிரைக் காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
யாழ்.பல்கலை  மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!-oneindia news

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான பல்கலைக்கழக மாணவன் வழக்கம் போல, இன்றும் பல்கலைக்கழகத்துக்கு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றுள்ளார். எனினும் எரிபொருள் போதமையால் சித்தன்கேணிக்குச் சென்று எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் வட்டுக்கோட்டை வழியாக யாழ்ப்பாணம் செல்ல வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை போக்குவரத்து பொலிஸார் அவரை வழிமறித்து ‘நாம் நீ போகும் போது மறித்தோம்? ஏன் நிற்கவில்லை?’எனக் கேட்டனர். அதற்கு ‘என்னை எவரும் மறிக்கவில்லை’ என மாணவன் சொன்னபோது, மேலதிகமாக சிவில் உடையில் அங்கு வந்த பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும் இணைந்து பல்கலை மாணவனைத் தாக்கத் தொடங்கினர். இதனை மாணவன் தனது செல்போனில் பதிவுசெய்ய, அந்த செல்போனையும் பொலிஸார் பறித்தனர்.
பின்னர் அவரை பொலிஸ் நிலையத்துக்கி கொண்டு சென்று, தலைகீழாகக் கட்டி சராமாரியாத் தாக்கினர். அத்துடன் செல்போனின் அந்த மாணவன் பதிவு செய்த காட்சிகளை அழிப்பதற்காக அதன் கடவுச்சொல்லையும் கேட்க, மாணவன் மறுத்துள்ளான். அதனால் இன்னும் கோபத்தோடு மாணவனை பொலிசார் தாக்கினர். ஒருகட்டத்தில் மாணவனுக்கு மூச்செடுக்க முடியாத நிலை ஏற்பட, அவனை வெளியே கொண்டு வந்தனர். ஏற்கனவே செய்தியறிந்து மாணவனின் தாயும் பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்து தப்பித்த மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் தன்னைப் பொலிஸார் கொலை செய்துவிடுவார்கள் என்ற பயத்தால் தப்பித்ததாகவும், தன்னைக் காப்பாற்றும்படியும் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்.பல்கலை  மாணவன் மீது பொலிஸார் கொலைவெறித்தாக்குதல்!-oneindia news


மாணவனின் உடலில் அடிகாயங்கள் இருப்பதால்,உடனடியாக அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.