Home இலங்கை செய்திகள் ருமேனியா செல்ல பணம் கொடுக்காத தந்தை-விபரீத முடிவெடுத்த மகன்..!

ருமேனியா செல்ல பணம் கொடுக்காத தந்தை-விபரீத முடிவெடுத்த மகன்..!

புத்தளம் , முந்தல் – மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் (18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முந்தல், மங்கள எளிய பகுதியைச் சேர்ந்த காவிந்த மதுசங்க (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் மதுரங்குளி வாராந்த சந்தைக்கு சென்ற நிலையில், வீட்டில் குறித்த இளைஞனும், தந்தையுமே இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மீன் வாங்குவதற்காக தந்தையும் வெளியே சென்றதுடன் சில மணி நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்பு வீட்டின் வரவேற்பறையில் தந்தை, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த போது வீட்டின் அறையொன்றுக்குள் சென்று கதவைப் பூட்டிய இளைஞன், பின் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சந்தைக்கு சென்ற தாயும், சகோதரியும் வீட்டுக்கு வருகை தந்த பின்பு, மகனை தேடியதுடன், வீட்டு அறையின் கதவையும் தட்டி அழைத்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் சகோதரியின் அழைப்புக்கு குறித்த இளைஞனிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காதமையால் உடனடியாக வீட்டு அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் ருமேனியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் நிலையில், தனது தந்தையிடம் 75 ஆயிரம் ரூபா பணம் கேட்டதாகவும், தற்போது கையில் பணம் இல்லை எனவும், மோட்டார் சைக்கிளை விற்று அல்லது அடகு வைத்து பணத்தை ஒழுங்கு செய்து தருவதாகவும் தான் கூறியதாக தந்தை தெரிவித்துள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பணத்தை கொடுக்காததால், ருமேனியாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற மன அழுத்தம் மகனுக்கு இருந்ததாகவும் தந்தை மேலும் கூறியுள்ளார்.

புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.

அத்துடன், உயிரிழந்த இளைஞனின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version