உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எனினும், குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அந்த இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு ஐந்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வாயதுடைய முத்துச் செல்வம் தனுஜன் எனும் இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.