Home jaffna news ஹரிஹரனின் இசை நிகழ்வில் ரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்.!

ஹரிஹரனின் இசை நிகழ்வில் ரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்.!

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது.

ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, பின்னர் 25,000, 7,000, 3,000 மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது இரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் வெறுப்பினையும் ஏற்படுத்தியது. அத்துடன் இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுடன் விருந்து அருந்தி புகைப்படம் எடுப்பதற்கு 30,000 ரூபா என அறிவிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இசைநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தவேளை இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சென்று முற்றவெளி திறந்த வெளி அரங்கை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர். இதனால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் பொலிஸார் மற்றும் கறுப்பு உடை தரித்த பாதுகாப்பு பிரிவினரால் இரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டது. இதனால் இசை நிகழ்ச்சி இடையிடையே தடைப்பட்டது. பின்னர் இசை நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டது.

சரியான திட்டமிடல் இன்மையே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் காசு கொடுத்து ரிக்கெட் வாங்கிய பலர் இருக்கைகள் இல்லாமையினால் அவதிப்பட்டனர். ஆனால் பலர் ஐந்து, ஆறு கதிரைகளை அடுக்கி வைத்துவிட்டு இருந்ததையும், எழுந்து கதிரைக்கு மேலே நின்றதையும் அவதானிக்க முடிந்தது. மேற்பார்வையாளர்களிடம் இது குறித்து முறைப்பாடு செய்தும் அவர்கள் இருக்கைகளை வாங்கி கொடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களும் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனை நொதேண் யுனியில் கல்வி கற்கும் மாணவர்களிடம் கூறும்போது அவர்கள், தாங்கள் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்றும், தாங்கள் கல்வி கற்கும் காரணத்தால் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இது குறித்து மேற்பார்வையாளர்களிடம் முறையிடுமாடு கூறினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் அவர்களது இசை நிகழ்ச்சி அதே அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக நடைபெற்றதுடன், அதில் எந்த குழப்பங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.