Home இலங்கை செய்திகள் தர்மம் மறுபடியும் வெல்லும்-தடை உத்தரவு குறித்து சிறிதரன் கருத்து..!

தர்மம் மறுபடியும் வெல்லும்-தடை உத்தரவு குறித்து சிறிதரன் கருத்து..!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் சி.சிறிதரனின் சமூக வலைத்தள பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த பதிவில் – தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும்! – என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாநாட்டிற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று(15) இடைக்கால தடை விதித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இன்று மதியம் தடையுத்தரவு விதித்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.