Home இலங்கை செய்திகள் பிரதமரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை..!

பிரதமரிடம் வடக்கு ஆளுநர் விடுத்த கோரிக்கை..!

வடக்கு மாகாணத்தில் தற்காலிக பணி இணைப்பிலுள்ள 388 பேருக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்குரிய அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், பிரதர் தினேஷ் குணவர்தனவிடம் நேரடியாக சென்று கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (07.03.2024) இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய அமைச்சில் பணியாற்றும் 67 பேருக்கும், உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள பிரிவுகளில் கடமையாற்றும் 321 பேருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்கருதி சேவையில் இணைக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும், இவர்களின் அனுபவம் மற்றும் துறைசார்ந்த திறன், அறிவை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதனூடாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை ஈடுகொடுக்க கூடியதாக அமையும் எனவும் கௌரவ ஆளுநர், பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள், நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக தெரிவித்த கௌரவ ஆளுநர், அவர்களின் பெயர்பட்டியல் அடங்கிய கோரிக்கை கடிதத்தையும் பிரதமரிடம் சமர்பித்துள்ளார். விசேட திட்டத்தின் கீழ் இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு கௌரவ ஆளுநர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட சிற்றூழியர் நியமனங்கள் வடக்கு மாகாணத்தில் முழுமையாக நிரப்பப்படவில்லை எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இதனால் வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிடங்களை நிரப்பி, சிறந்த பொதுச் சேவையை வழங்குவதற்கு ஆவணம் செய்யுமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கை கடிதத்தை பெற்றுக்கொண்ட பிரதர் தினேஷ் குணவர்தன, இந்த விடயம் தொடர்பில் விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக உறுதியளித்தார்.