எப்படியிருந்தோம்; இப்படியாகி விட்டோமா? (ஆசிரியர் பார்வையில்..)

எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான். ஆனால் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எந்தக் காலத்திலும் அலைந்தவர்கள் அல்லர்.

இப்போது ’முற்றவெளியில் முதன்முறையாக ‘ என்ற அறிவிப்புடன், ஏதோ கலையுணர்வே அற்ற ஜென்மங்களுக்காக , மனமிரங்கி வந்திருப்பதாகவே ஹரிகரன் இசைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு ஈழத்தவர். புலம்பெயர் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு வேண்டுமானால் சினிமாக் கூத்தாடிகள் வானத்தில் இருந்து வந்தவர்கள் போல தெரியலாம். அவரது மனைவி ரம்பா போன்ற நடிகைகள் தான் உலகில் உன்னதமானவர்கள் என்று அவர் நினைக்கலாம். ஆனால் அதற்காக ஈழத்தமிழர்களை அவர் கிள்ளுக்கீரையாக நினைப்பது அவரது அறிவிலித்தனத்தையே காட்டும்.
1990 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி. இதே யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எள் போட்டால் கூட விழ இடமில்லாத சனக்கூட்டம். வந்தது வயோதிபத்தின் ஆரம்பத்தில் இருந்த தேனிசை செல்லப்பா. அவர் பாலுணர்வைத் தூண்டும் குத்துப்பாடல்களைப் பாடியவரல்லர், தனக்கு கூட்டம் சேர்க்க தமன்னா போன்ற கவர்ச்சி நடிகைகள் புடைசூழவும் வந்தவரல்லர். ஆனாலும் அவரைக் காண, அவர் பாடலைக் கேட்க தாயகத்தின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர். தேனிசை செல்லப்பா தமிழர்களின் விடுதலையை நேசித்த ஒரு பிறவிப்பாடகன். புலிகளைப் பாடிய வாயால் அரசியல்வாதிகளையோ, சினிமாத்தனமான குப்பைகளோயோ பாடமாட்டேன் என்று சத்தியம் செய்த நித்தியக்கலைஞர். எனவே நெருப்பாறாக அவர் வாயில் இருந்து வந்த இசையில் நரம்புகள் முறுக்கேறி, விடுதலையுணர்வு முற்றவெளியை அன்றைக்கு நிறைத்திருந்தது.

அதேமுற்றவெளியில் தான் இப்போது ஹரிகரன் குழுவினரின் இசைக்கேளிக்கை நிகழ்வும் நடந்தேறியுள்ளது. இளையோரின் பாலுர்வுணவைத் தூண்டி, அவர்களை தென்னிந்தியச் சினிமா மோகத்துக்குள் வீழ்த்தி, கேளிக்கைப் பாதைக்குள் பயணிக்க வைப்பதே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம். ‘ ஈழத்தமிழர்கள் எப்போதும் அழுது கொண்டிருக்க வேண்டுமா? ஆறுதலுக்கு இப்படியான நிகழ்ச்சிகள் வேண்டாமா?’ என்று ஒருசாரார் கம்புசுற்றக்கூடும். ஆனால் ‘ஈழத்தமிழர்கள் எப்போது அழுதுகொண்டிருந்தார்கள்?’என்று திருப்பிக் கேட்பதே பொருத்தமானது. போர் ஒருபக்கம் தேசத்தில் தீயாகத் தகித்தபோதும், மறுபுறம் மக்களை கலை, இலக்கிய செயற்பாடுகளால் எப்போதும் துவளவிடாமல் புத்துணர்ச்சியூட்டும் பணி ஓய்ந்ததே இல்லை. அதனால்தான் கலைபண்பாட்டுக்கழகம் என்ற தனிப்பிரிவையே உருவாக்கி, மக்களின் மனதை ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சிகள் முடிவில்லாமல் நடந்தன. முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை ஒருபுறம் போரும், மறுபுறம் கலையுமாக வாழ்ந்தவர்கள் தான் ஈழத்தமிழர்கள். ஆனாலென்ன, எமது பண்பாடும் , கலையும் வேறுவிதமானவை. மலினமான உணர்வுகளை மையமாகக் கொண்டவையல்ல. மாறாக மக்களை ஆற்றுப்படுத்துவதோடு, மானுட விடுதலைக்கான ஆயுதங்களாகவும் விளங்கின. எமது மரபை, தொன்மையை, இருப்பை அடுத்த சந்ததிக்கு ஊடுகடத்தும் கருவிகளாகவும் கலைகளை நாம் கைக்கொண்டிருந்தோம். அப்போது எந்தக் ஹரிகரனோ, தமன்னாவோ, யோகி பாபுவோ இங்கு வரவில்லை. எங்களுக்காக எங்கள் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எம் ஆன்மாவை ஆறுதல்படுத்தினார்கள். பதிலுக்கு நாமும் அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இப்போது நடப்பதென்ன..? எங்கள் வக்கிர உணர்வுக்கு தீனிபோடும் வகையில் களியாட்டங்கள் நடத்தி, இதுவே நாம் பிறப்பெடுத்த நோக்கம் என்பதாக நம்பவைக்கப்படுகிறோம். இந்தக் களியாட்ட நிழலில் நம் போராட்டத்தின் வீரவரலாறு புதைக்கப்படுகிறது. எம் பண்பாடு சிதைக்கப்படுகிறது. இத்தகைய விஷச்செடிகள் வளர்வது ஈழத்தமிழினத்தின் தனித்துவத்துக்கும், உரிமைக்கான போராட்டத்துக்கும் எப்போதும் ஆபத்தே. இனியேனும் கொஞ்சம் விழிப்படைவோம். இரவல் சேலையில் கொய்யகம் போடாமல், நமக்கான நம் கலைஞர்களை அவர்களின் கலைகளைக் கொண்டாடுவோம். நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்.