Home இலங்கை செய்திகள் காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது..

காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது..

காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (27.02.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கில் அரச பாதுகாப்பு படைகளால் யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கேட்டு தொடர் போராட்டம் ஆரம்பித்து அதன் ஏழாவது நிறைவு தினத்திலே மீண்டும் ஒரு கவனயீர்ப்பு போராட்ட பேரணியை நடத்தி ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு ஆறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இக் கோரிக்கைகள் நியாயமானது. உறவுகளை பறிகொடுத்த வலிகளோடு தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வடகிழக்கு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் தமது முழுமையான ஆதரவை நடத்துவதோடு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஐ.நா மனித உரிமை பேரவையை வலியுறுத்துகின்றது.

யுத்த காலத்தில் தமது உறவுகளை தேடி அலைந்த அவர்களின் உறவுகள் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அமைப்பு ரீதியில் நீதி கேட்டு தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டங்களை நடாத்தியவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தன் உறவுகளை தேடி தேடித் மன வேதனைக்கு உட்பட்டவர்கள் பல்வேறு நோய் தாக்கத்தின் காரணமாகவும், வயது மூப்பினாலும், இரத்த உறவுகளின் பிரிவினாலும் இதுவரை 200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதனை இயற்கை மரணம் என கடந்து விட முடியாது.

இலங்கை அரசு நீதி மறுத்து இவர்களை கொலை செய்தது என்றே அடையாளப்படுத்தல் வேண்டும். இந்நிலை இனியும் தொடர சர்வதேச மனித உரிமை அமைப்புகளும்,ஐ.நா மனித உரிமை பேரவையும் இனியும் இடமளிக்கக் கூடாது என்பது எமது உருக்கமானதும் அளுத்தமானதுமான வேண்டுகோள்.

ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளை கடந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது.

இது விடயம் தொடர்பில் அரசின் செயற்பாடுகளில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல வடகிழக்கிற்கு வெளியே நீதி மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும் நம்பிக்கை இல்லை. காலத்தை இழுத்து அடித்து நீதியை மறுக்கும் செயற்பாடுகளையே அனைத்து ஆட்சியாளர்களும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.

இலங்கையில் நிகழ்ந்த பல்வேறு பாரதூர சம்பவங்கள் தொடர்பில் ஆழ ஆராய்ந்து அதன் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், அவ்வாறான நிகழ்வுகள் மீழ் நிகழ்வதை தடுப்பதற்கு என 1956 லிருந்து இதுவரை 36 வரை ஆணை குழுக்கள் அமைக்கப்பட்ட போதும் அவ் ஆணை குழுக்களின் அறிக்கைகள் முழுமையாக மக்கள் முன் வைக்காது மறைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளனர்.

அது மட்டுமல்ல அவ் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கும் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் துணிவு இருக்கவில்லை.காரணம் உண்மையை மூடி மறைத்து அரசியல் குளிர் காய்வதே அவர்களின் நோக்கம்.

அவ்வாறே யுத்தம் முடிவற்றதன் பின்னர் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் பல்வேறு ஆணை குழுக்கள் நியமிக்கப்பட்டன.அவ் ஆணைக்குழுக்கள் நியாயமான பரிந்துரைகளை முன் வைத்த போதும் அதனை நிறைவேற்றுவதற்கு ஆட்சியாளர்கள் துணியவில்லை.

காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பது கானல் நீராகவே உள்ளது.. - Dinamani news - காணமல், காணமல் ஆக்கப்பட்டோருக்கான, காணாமலாக்கப்பட்டோரின்

தொடர்ந்தும் சர்வதேசத்தின் கண்களில் மண்ணை தூவி உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதியை நிலைநாட்டப் போவதாக அறிவிக்கலாம். இதற்கு வலிந்து காணாமலாக்கட்ட உறவுகளின் அமைப்போ நாமோ உடன்பட போவதில்லை என உரத்து கூறுகின்றோம்.

ஆதலால் இச்சந்தர்ப்பத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அளுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும், இலங்கை ஆட்சியாளர்கள் பெற்றுக் கொடுக்கப் போவதாக கூறப்படுகின்ற உதவிகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தேவையை நிறைவேற்றலாமே தவிர அதன் மூலம் எதிர்பார்க்கும் நீதியை அடைய முடியாது என்பதே உண்மை.

எனவே சர்வதேச உதவி அமைப்புகளும்,நலன் விரும்பிகளும் வலிகளோடு வாழும் உறவுகளின் அமைப்பால் ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் விடயத்திலும், யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ,ஐ. நா மனித உரிமை பேரவையும் இலங்கை ஆட்சியாளர்களை இனியும் நம்பக் கூடாது என்பதோடு எனது வாலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அவசர உடனடி நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும் என ஐநா மனித உரிமை பேரவையிடம் வேண்டிக் கேட்டுக் கொள்வதோடு

யுத்த குற்றவாளிகளை அடையாளம் கண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமாறும் தமிழர்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கும் இன அழிப்பினை சர்வதேசம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது என்பது அதனை அங்கீகரிப்பதாக அமைந்து விடுமாதலால் ஆதலால் அதனை தடுப்பதற்கு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Exit mobile version