Home இலங்கை செய்திகள் நுண்கடன் திட்டங்களில் சிக்கி தவிக்கும் கிராமப்புற மக்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

நுண்கடன் திட்டங்களில் சிக்கி தவிக்கும் கிராமப்புற மக்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

நுண்நிதிய கடன் பிரச்சினையால் கிராமப்புறங்களில் சுமார் 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 முதல் 48 சதவீதம் என்ற அடிப்படையில் அதிக வட்டிக்கு கடன் வழங்கப்படுகிறது. நுண்கடன் திட்டங்களினால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கை பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கு நுண்கடன் திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளது எனப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் நுண்நிதிய பிரச்சினை காரணமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் அண்மையில் கூடிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நுண்நிதியக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் இந்தக் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தன. மேலும், இலங்கை மத்திய வங்கி, நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அமைப்புக்கள் இங்கு உரையாற்றுகையில், நுண்நிதி நெருக்கடியினால் 28 இலட்சம் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 24 இலட்சம் பெண்கள் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனைச் செலுத்த முடியாத நிலையில், 38 முதல் 48 சதவீத  வட்டி அறவிடப்படுவதாகவும்  இதன் காரணமாகக் கிராமப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளதாகவும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். மத்திய கிழக்கு நாடுகளில் அதிகமான கிராமப்புறப்

பெண்கள் வீட்டு வேலைக்குச் செல்வதற்கு நுண்கடன் நெருக்கடி காரணமாக அமைந்திருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டினர்.

மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் உள்ள வங்கி அல்லாத ஆறு பிரதான நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியிருப்பதாகவும், நுண்நிதி கடனான 84,000 மில்லியன் ரூபாவில்  67,000 மில்லியன் ரூபாவை இந்நிறுவனங்கள் வழங்கியிருப்பதாகவும், கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்துவதை இந்நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும் இங்குத் தெரியவந்தது.

அத்துடன் உத்தேச சட்டமூலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை எனவும் இதனால் தாங்கள் மேலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

உத்தேச சட்டமூலத்தை முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகதுறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்படி அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தாமல்,மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து சட்டமூலத்தை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், ஆறு பரிய நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் அது இருக்க முடியாது.

இதன் ஊடாகப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் இலங்கையிலுள்ள 30 முதல் 40 இலட்சம் வரையிலான நுண்நிதி வாடிக்கையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது விடயம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவிருப்பதாகவும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version