Home இலங்கை செய்திகள் அஸ்வெசும தரவுகள் சரிபார்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

அஸ்வெசும தரவுகள் சரிபார்ப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப அலகுகளின் எண்ணிக்கையை ஜூன் மாதம் முதல் 24 இலட்சமாக அதிகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் 2024 மார்ச் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்கள் எவரும் அஸ்வெசும பலனைப் பெறத் தகுதி பெற மாட்டார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற சுமார் 7000 பேர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

எங்களுக்கு 12,27,000 முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைத்துள்ளன. அவர்களில் சுமார் 11,97,000 பேர் தொடர்பில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கு மேலதிகமாக, அஸ்வெசும உதவிகள் உண்மையிலேயே தகுதியான ஒரு குழுவினருக்கு கிடைக்கவில்லை. முதல்கட்ட விண்ணப்பத்தில் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்காததால், அவர்களுக்கு அஸ்வெசும பலன் கிடைக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

Exit mobile version